தமிழ் மொழி புறக்கணிப்பு – நாளை அவசர வழக்காக விசாரணை

தமிழ் மொழியை புறக்கணித்து, மத்திய தொல்லியல் துறை, பட்டயப் படிப்புக்காக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு, நாளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வருகிறது. அங்கு தொல்லியல்துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் செம்மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டு, இந்திய வரலாறு, மானுடவியல் மற்றும் செம்மொழிகளான சமஸ்கிருதம், பாலி மற்றும் அரபு மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே, விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதனால், இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, செம்மொழியான தமிழ் மொழியையும் அதில் இணைக்க உத்தரவிட வேண்டும் என்றும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வழக்கறிஞர் அழகுமணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை அவசர வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

Exit mobile version