இந்தியாவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையிலான APPகளை தயாரிக்க உங்களிடம் ஐடியா இருக்கிறதா? ஆம், என்றால் உங்களுக்குத்தான் மத்திய அரசின் ஜாக்பாட் பரிசு காத்திருக்கிறது…
சீனாவுடனான போர் சூழல் மற்றும் இந்தியர்களின் தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு ஆகிய காரணங்களுக்காக சீனாவின் 59 செயலிகளை இந்தியாவில் தடை செய்தது மத்திய அரசு… டிக்டாக், ஹலோ உள்ளிட்ட செயலிகளும் தடைசெய்யப்பட்டதால் இதனைப் பயன்படுத்திவந்த கோடான கோடி மக்கள் சிங்காரி, ஷேர்சேட் என்று நம்ம ஊர் ஆப் பக்கம் கொஞ்சம் திரும்பினாலும், இன்னும் வருத்தத்தில் தான் இருக்கின்றனர்… அவர்களுக்கு புத்துணர்வூட்டும் ஓர் அறிவிப்பை வெளியிட்டு அசத்தியிருக்கிறார் பிரதமர் மோடி….
வெளிநாடுகளைத் தலைமையிடமாகக் கொண்ட மற்ற ஆப்புகளுக்கு மாற்றாகவும், இந்தியாவில் ஆப்கள் தயாரிப்பதை ஊக்கும் விதமாகவும் சுயசார்பு இந்திய ஆப் கண்டுபிடிப்பு சவாலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் மோடி…
இன்று உலகத் தரம் வாய்ந்த மேட் இன் இந்தியா ஆப்ஸை உருவாக்க தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட்அப் கம்பெனிகள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது. துடிப்புமிக்க அந்த தொழில்நுட்ப வல்லுனர்களின் யோசனைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக சுயசார்பு இந்தியா திட்டத்தை பயன்படுத்தப்போவதாகவும் கூறியிருக்கிறார்…
டிராக் 1 மற்றும் டிராக் 2 என்ற இரண்டு வழிமுறைகளில் இந்த உள்நாட்டு ஆப்களுக்கான அரசின் உதவி கிடைக்க இதன் மூலம் வழிவகை செய்யப்படுகிறது.. இந்தியாவில் ஏற்கனவே மக்கள் பயன்படுத்தும் உள்நாட்டு ஆப்களை முதலில் அடையாளம் கண்டு, அவற்றை உலகத்தரம் வாய்ந்தவைகளாக மாற்றுவது டிராக் 1ன் திட்டம்… இனிவரும் நாட்களில் புதிய தொழில்முனைவோர்கள் ஆப்களை உருவாக்க ஊக்குவிப்பது, அந்த ஆப்களை உருவாக்குவதற்காகவும் உலகத்தரத்திற்கு உயர்த்துவதும் டிராக் 2ன் திட்டம்.
உற்பத்தித்திறன், இணையபயன்பாடு, E-learning. பொழுதுபோக்கு, உடல்நலம் மற்றும் ஆரோக்கியம், விவசாயம், வணிகங்கள், செய்திகள் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளுக்கு முதற்கட்டமாக முன்னுரிமை வழங்கப்பட உள்ளது..
பிரதமரின் இந்த சவாலை ஏற்கும் நிறுவனங்கள் ஜூலை 4 முதல் ஜூலை 18 க்குள் தங்கள் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதனை மதிப்பீடு செய்ய தனி குழு நியமிக்கப்படும்… இந்த சவாலில் வெற்றி பெறுபவர்களுக்கு முறையே 20, 15, 10 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும்… ஆறுதல் பரிசாக முறையே 5,3,2 லட்ச ரூபாய்களும் அறிவிக்கப்பட்டுள்ளன…