இன்றைய தினங்களில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் இந்த பிப்ரவரி மாதத்தில் தனது 11 வயதில் அடியெடுத்து வைத்துள்ளது. 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் ஆரம்ப காலங்களில் அவ்வளவு பெரிதாக மக்களிடம் சென்று சேரவில்லை. காரணம் அந்த சமயங்களில் மக்கள் அவ்வளவாக ஆண்டிராய்ட் மொபைல்களுக்கு மாறவில்லை. ஆனால் இன்றோ, ஆண்டிராய்ட் மொபைல்களே உலகம். ஒருவருடனான உரையாடலில் நல்லா இருக்கீங்களான்னு மறக்காம கேட்கிறோமோ இல்லையோ… வாட்ஸ்அப்-ல இருக்கீங்களான்னு கேட்க மறக்கிறதே இல்ல.
வாட்ஸ்அப்-பும் வாடிக்கையாளர்களின் தேவைவை அறிந்து அவ்வப்போது புதுப்புது வசதிகளை தந்துக்கொண்டே இருப்பதால் அதில் உள்நுழைந்தவர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் வெளியேறுவதில்லை.
முதன்முதலாக வாட்ஸ்அப் தொடங்கப்பட்டப் போது ஐபோன், ஆண்ட்ராய்டு ஆகிய தளங்களிலும் பயன்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டது. அதில் மெசேஜ் அனுப்பும் வசதி மட்டுமே இருந்தது. பின்னர்தான் போட்டோஸ், வீடியோஸ், ஸ்மைலிகள் அனுப்பும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இன்று உச்சக்கட்டமாக வாட்ஸ்அப் ஸ்டிக்கர்ஸ் அனுப்பும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்துதான் வாட்ஸ்அப்-பில் குரூப் மெசேஜ் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பயனாளர்கள் தங்களது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், தொழில் முறையிலான நட்புகள் என அனைவரிடமும் உரையாட எளிதாக இருந்தது. அதே சமயத்தில் ஒரு செய்தியை ஒரே நேரத்தில் எத்தனை குரூப்புகளுக்கும் வேண்டுமானாலும் பகிரும் முறை முதலில் இருந்தது. ஆனால் போலியான மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் தற்சமயம் ஒரு நேரத்தில் 5 குரூப்புகளுக்கு மட்டுமே அனுப்ப முடியும் என வரைமுறை கொண்டுவரப்பட்டது.
நாம் இருக்குமிடத்தை மற்றவர்களுக்கு அனுப்பும் லொக்கேஷன் ஷேரிங் முறை 2010ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2015ம் ஆண்டு தான் டெஸ்க்டாப் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தப்பட்டது.
2014ல் அதிகப்படியான வளர்ச்சியில் சென்ற வாட்ஸ்அப்-ஐ பேஸ்புக் நிறுவனம் விலைக்கொடுத்து வாங்கியது. அதே ஆண்டில் தான் அனுப்பிய மெசேஜ் சென்றதாகவும், பார்த்ததாகவும் காட்டும் டபுள் டிக், நீல கலர் குறியீடு என வேறு பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. 2016ல் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1 பில்லியனாக உயர்ந்தது. அதனை கொண்டாடும் விதமாக வீடியோ காலிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்று அதிலும் அப்டேட் வெர்ஷனாக குரூப் காலிங், குரூப் வீடியோ காலிங் என சகலவிதமான வசதிகளும் வந்துவிட்டன. ஸ்டேட்டஸ் வைப்பதே பெரும்பாலான பேருக்கு பொழுதுபோக்கு. மேலும் அனுப்பிய செய்திகளை அழிக்கும் வசதியும் இதில் உள்ளது. இன்னும் பல வசதிகள் அறிமுகப்படுத்தத்தப்பட இருக்கின்றன.
கண்ணை திறந்து மூடினால் எதாவது ஒரு அப்டேட் கொடுக்கும் வாட்ஸ்அப்…கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க ப்ளீஸ்….!