நீலகிரியில் இயங்கி வரும் தேயிலை தொழிற்சாலைகளில் கலப்படம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோத்தகிரி, கட்டபெட்டு, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் பிரபல தேயிலை தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலையில் கலப்படம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தேயிலைத் தூள், தமிழகத்தின் தேனீர் கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேயிலையில் கலப்படம் செய்யப்படுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
கோத்தகிரியில் கடந்த வாரத்தில் ரசாயனப் பொடிகளுடன் வந்த லாரியை அதிகாரிகள் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் நீலகிரி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இவ்வாறு கலப்படம் செய்யப்படும் தேனீரை குடிப்பதால் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும் தேநீரை குடித்தால், புற்றுநோய் ஆபத்தை தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இத்தகைய கலப்பட தேநீரை குடிப்பதன்மூலம் புற்றுநோய் ஆபத்தை நாமே உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையை மாற்றி, கலப்பட தொழிற்சாலைகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தேயிலை விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.