14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, பழைய முறைப்படி பொதுமக்கள் மஞ்சள் துணி பைக்கு மாறி வருகின்றனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது. இதனால், மளிகை கடை, காய்கறி கடை, உணவகங்கள் உள்ளிட்ட பெரும்பால கடைகளில் பிளாஸ்டிக் பைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப்பை, கட்டப்பை உள்ளிட்டவைகளை, கடையின் உரிமையாளர்களும், பொதுமக்களும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். மேலும், பழைய முறைப்படி, மஞ்சள் பைக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. மக்கள், கடைகளுக்கு செல்லும் போதே, தங்கள் கையில், துணிப்பை, ஜுட் சாக்குப்பை போன்றவற்றை எடுத்துச் செல்ல துவங்கி விட்டனர்.
தமிழக அரசின் நடவடிக்கையால், மஞ்சள் பை, துணிப்பை, காகித பைகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், பொருட்களுக்கு மட்டுமின்றி, மஞ்சள் பை, துணிப்பைக்கான விற்பனையும் ஜோராக நடைபெற்று வருகிறது. சென்னை பாரிமுனையில் உள்ள மொத்த, சில்லரை கடைகளில் இருந்த துணிப் பை, காகிதப் பை போன்றவை, இரண்டு நாட்களில் அதிக அளவில் விற்றுத் தீர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, மஞ்சள் துணிப் பை, கட்டப்பை உள்ளிட்டவைகளை பயன்படுத்துவதன் மூலம், இயற்கையும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருவதை, பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர் என்பதில், எவ்வித மாற்றுக்கருத்தில்லை.