ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ மரணமடைந்தால் இடைத்தேர்தல் நடத்தாமல் மரணமடைந்தவரின் கட்சியின் சார்பில் மற்றொருவரை தேர்ந்தெடுக்கலாமே என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி, மதுரை மதிப்பனூரைச் சேர்ந்த தாமோதரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வில் இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு தொகுதியில் எம்எல்ஏ மரணடைந்தால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தாமல், அந்தக் கட்சியின் சார்பில் மற்றொருவரை தேர்ந்தடுக்கலாமே என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், இடைத்தேர்தல் நடத்துவதை தவிர்த்தால், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது தவிர்க்கப்படுவதோடு, மக்களின் வரிபணம் வீணாவதை தவிர்க்கலாம் என்று குறிப்பிட்ட அவர்கள், இந்த கருத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு பொருந்தாது என்றும் கூறினர். இவ்வழக்கு விசாரணையை பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.