முதலமைச்சர் வருவாரோ? மாட்டாரோ? என நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்

முதலமைச்சர் தனிப்பிரிவில், இன்று மக்களிடம் முதலமைச்சர் மனுக்கள் பெறுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வந்து மனுக்கள் பெறாததால், பலமணி நேரம் காத்திருந்த மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில், முதலமைச்சர் பொதுமக்களிடம் இருந்து நேரிடையாக மனுக்கள் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நேற்று அறிவிப்பு வெளியான நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து வந்திருந்த பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தலைமைச் செயலகம் அருகே மிக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இந்த நிலையில், நிகழ்ச்சிக்கு திட்டமிட்டப்படி முதலமைச்சர் ஸ்டாலின் வராததால், வெகுநேரமாக காத்திருந்த பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்துக் கொள்ளாததற்கான காரணமும் தெரிவிக்கப்படாததால், முதலமைச்சர் தனிப்பிரிவில் மனுக்களை வழங்கிவிட்டு, பொதுமக்கள் கவலையுடன் திரும்பிச் சென்றனர்.

 

இதனிடையே, பெரும்பாலான மக்கள் ஏமாற்றத்துடன் வெளியேறிய நிலையில், திடீரென வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்த சில மக்களிடம் மட்டும் மனுக்களை பெற்றுக்கொண்டு, வேகமாக சென்றுவிட்டார்.

Exit mobile version