திருவள்ளூரில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கமானது சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் நீர்த்தேக்கத்தின் இருப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தில், நீர் இருப்பு 989 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணை மற்றும் வரத்து கால்வாய்களில் இருந்து, நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 61 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்த்தேக்கத்தில் இருந்து புழல் ஏரிக்கு 470 கனஅடி நீர் இணைப்புக் கால்வாய் வழியாக அனுப்பப்பட்டு வருவதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.