திமுக என்றால் அராஜகம், அதிமுக என்றால் அமைதி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து, ஒத்தக்கடையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மக்கள் சேவை என்ற பெயரில், மக்களின் உடைமைகளை கொள்ளையடிக்கவே திமுக செயல்பட்டு வருவதாக விமர்சித்தார். கடந்த திமுக ஆட்சியில் பொதுமக்களின் சொத்துகளை திமுகவினர் அபகரித்த போது, ஏராளமான பொதுமக்கள் உதவியின்றி தவித்ததாக வேதனையுடன் குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியில் நில அபகரிப்பு பிரிவு மூலம் திமுகவினர் அபகரித்த 14 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்டு உரியவர்களிடம் திரும்ப வழங்கி துயரம் துடைத்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கும் போதே அராஜக போக்கினை கடைப்பிடிக்கும் திமுகவிடம் அதிகாரம் சென்றால், தமிழ்நாடு அமைதி இழக்கும் என்று தெரிவித்தார்.
மதுரை மேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளானை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளை கொச்சைப்படுத்தியும், அவமானப்படுத்தியும் பேசி வரும் ஸ்டாலினுக்கு, நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், நீர் மேலாண்மை, கல்வி, மின்சாரம், சட்டம் ஒழுங்கு, தொழில்துறை உட்பட அனைத்து அம்சங்களையும் மெருகேற்றி முன்னோடியாக மாற்றியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.