கொத்தவரங்காய் சாப்பிட்டால் கொரோனா குணமாகுமா? வாட்ஸ் ஆப், ட்விட்டர், பேஸ்புக் வலைதளங்களில் தீயாய் பரவும் வதந்திக்கு மருத்துவர்கள் தரும் விளக்கத்தை பார்க்கலாம்.
கொரோனா பேரிடர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகையே திக்குமுக்காட வைத்திருக்கிறது.
மருந்துகள், தடுப்பூசி என மருத்துவ உலகம் இராப் பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறது.
அலோபதி மருத்துவர்களுக்கு சவால் விடும் வகையில் மூலிகை மருந்து, இயற்கை மருந்து, கசாயம் என பேஸ்புக், யூடியூப், ட்விட்டரில் தினம்தினம் புதுப்புது ஆண்ட்ராய்டு கொரோனா ஆராய்ச்சியாளர்கள் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மழைக்கால காளான்கள் பரப்பும் வதந்திக்கு எல்லையே இல்லை.
ஊர் முச்சந்தியில் வேப்பிலை கட்டுவது முதல் தெருவில் ஒன்றுகூடி ஆவி பிடிப்பது வரை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இப்படியாக பரவி நிற்கும் வதந்திகளை வரிசைப்படுத்தினால் நூற்றுக்கணக்கில் அடுக்கிவிடலாம்.
இதில் சமீபத்திய வரவுதான் கொத்தவரங்காய்.
கொரோனாவை எதிர்கொள்வதில் கொத்தவரங்காய்க்கு ஸ்பெஷல் சக்தி இருப்பதாக நெட்டிசன்கள் இடையே தீயாய் பரவும் வதந்தியால், பல வீடுகளின் மெனு லிஸ்டில் நீங்கா இடம் பிடித்துவிட்டது கொத்தவரங்காய்.
ஆனால் மருத்துவர்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினால், அனைத்து காய்கறிகளுக்கும் உள்ள அதே எதிர்ப்புத்திறன் தான் கொத்தவரங்காய்க்கும் இருப்பதாக விளக்குகின்றனர்.
அதேசமயம், நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கொத்தவரங்காய் பலனளிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொத்தவரங்காய் மட்டுமே கொரோனாவை எதிர்கொள்ள சிறந்த காய்கறி என்ற கருத்து ஏற்புடையதல்ல என்றும், செலினியம், ஜிங்க், வைட்டமின் சி சத்துள்ள பிற காய்கறிகளையும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டுமென சத்துணவு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அன்றாட உணவில் அரிசி, கம்பு, பருப்பு, முட்டை, சிக்கன், மீன், நீர்ச்சத்து மிக்க காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்வது பலனளிக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
சமூக வலைதளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை விடுத்து, மருத்துவர்களின் ஆலோசனைக்கு பின்பே எதையும் பின்பற்ற வேண்டுமென சத்துணவு நிபுணர்கள் எச்சரிக்கின்றார்.