தன்னுடைய அரிய கண்டுபிடிப்பை கண்டு , நாசாவிற்கு வருமாறு அமெரிக்க விடுத்த அழைப்பினை இந்திய மாணவன் ஏற்க மறுத்துள்ளார்.
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது மதிக்கதக்க கோபால்ஜி என்ற மாணவன் ,ஏழை குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில் படித்துள்ளார்.
அப்போது அறிவியல் சார்ந்த புதிய பொருட்களை கண்டுபிடிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அதாவது வாழை இலையின் கழிவில் இருந்து அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளான வாழை உயிர் செல், அதிக வெப்பத்தை தாங்கக்கூடிய கோபோனியம் அலாய் ஆகியவற்றை உருவாக்கி உள்ளார். மேலும் நீர் மின் உயிர் செல், கோபா அலாஸ்கா, போலி பிளாஸ்டிக், லிச்சி ஒயின் போன்ற மற்ற சோதனைகளிலும் கோபால்ஜி ஈடுப்பட்டு வந்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோபால்ஜி தனது முயற்சி பற்றி கூறியுள்ளார்.பின்பு அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும், பின்னர் ஆமதாபாத்தில் உள்ள தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளைக்கும் அனுப்பப்பட்டுள்ளார். அங்கு சென்ற கோபால்ஜி 4 புதிய கண்டுபிடிப்புகளை செய்து காட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள் வரத்தொடங்கியது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கோபால்ஜிக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் துபாய், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு கோபால்ஜிக்கு அழைப்புவிடுத்துள்ளது. இதையெல்லாம் அவர் கண்டுகொள்ளாமல், ‘இந்தியாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும்’ என்ற குறிக்கோளுடன் இருப்பதாக கோபால்ஜி தெரிவித்துள்ளார். இந்தியாவில் படித்து விட்டு வெளிநாட்டிற்கு வேலை பார்க்க செல்பவர்களுக்கு மத்தியில் இந்தியாவிற்காக பணியாற்ற துடிக்கும் மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.