சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
சுவிட்சர்லாந்து நாட்டில், டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரிட்டன் இளவரசர் சார்லஸ், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 300 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், டாவோஸ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்துப் பேசினார். அந்தப் பேச்சுவார்த்தையில், காஷ்மீர் பிரச்சினை குறித்துப் பிரதானமாகப் பேசப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடனான சந்திப்புக்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரம் குறித்து நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதில் எங்களால் உதவ முடிந்தால், நிச்சயம் நாங்கள் உதவி செய்வோம் என்றும், காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியப் பிரதமர் மோடியிடம் பேசுவேன் என்றும் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த இம்ரான் கான், இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், பாகிஸ்தான் எப்போதும் அமைதியை மட்டுமே விரும்புவதாகவும் தெரிவித்தார்.