எல்லை சுவர் கட்டுவதற்காக தேசிய அவசரநிலை அறிவிப்பை மேற்கொள்ள விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லைப் பகுதியில் சுவர் கட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்கென 39 ஆயிரத்து 693 கோடி ரூபாயை ஒதுக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை கேட்டிருந்தார்.
ஆனால் இந்த கோரிக்கைக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தீர்மானம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து வெள்ளை மாளிகையில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் நடத்தப்பட்ட கூட்டத்திலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால், அமெரிக்காவில் 20 நாட்களாக அரசு அலுவல்கள் முடங்கியுள்ளன.
இதையடுத்து உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் தனது டாவோஸ் சுற்றுப்பயணத்தை டிரம்ப் ரத்து செய்துள்ளார். இதுகுறித்து டெக்சாஸில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அமெரிக்காவில் அவசரநிலையை வேகமாக செய்ய வேண்டும் என்று நினைப்பதாக தெரிவித்தார். ஏனெனில் அதற்கு எந்த செலவும் ஆகாது என்று அவர் குறிப்பிட்டார்.