ஜி 7 மாநாட்டில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன் : பிரதமர் மோடி

காஷ்மீர் விவகாரத்தில் இந்திய நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டே முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை மோடி சந்தித்தார். இருவரும் பழமையான சாண்டிலி அரண்மனையை சுற்றிப் பார்த்தனர்.

இதைத்தொடர்ந்து இருநாட்டு உறவுகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரான்ஸ் அதிபர், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு இன்றி, இந்தியாவும் – பாகிஸ்தானும் தீர்வு காண வேண்டும் என்றார். தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து இருப்போம் என்று கூறிய பிரான்ஸ் அதிபர், ஜி7 மாநாட்டில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என்றார். அதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, காஷ்மீர் விவகாரத்தில் நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டே முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். ரஃபேல் போர் விமானத்தை அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்க பிரான்ஸ் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, பிரான்ஸில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே, பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை அடுத்து, இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமர் மோடி, அபுதாபி மன்னரை சந்தித்து பேசுகிறார். அதைத்தொடர்ந்து, நாளை பஹ்ரைன் செல்லும் பிரதமர், அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசுகிறார். பின்னர், 25ஆம் தேதி மீண்டும் பிரான்ஸ் செல்லும் மோடி, 25 மற்றும் 26 தேதிகளில் நடைபெறும் ஜி 7 மாநாட்டில் சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொள்கிறார்.

Exit mobile version