ஹூண்டாய் மின்சார காரை தொடங்கி வைத்தார் முதல்வர்

காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ள மின்சார காரை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கிலோ மீட்டர் ஓடும் இந்த காரின் சிறப்புகளை விரிவாகப் பார்க்கலாம்…

ஹவாய் தீவில் உள்ள கோனா – என்ற பகுதி சாகசங்களை விரும்பும் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. அதன் நினைவாகவே கோனா என்று பெயரிடப்பட்டிருக்கிறது ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த நவீன எலக்ட்ரிக் கார்.

அழகான வெளிப்புறத் தோற்றம், வலிமையான வடிவமைப்பு, விபத்துகளில் உயிர் காக்க பயன்படும் காற்றுப் பைகள், ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற நவீன செல்ஃபோன் செயலிகளை பயன்படுத்தக்கூடிய 7 இன்ச் தொடு திரையுடனான பொழுதுபோக்கு அம்சங்கள் என்று முழுமையான சொகுசு காராக சந்தைக்கு வந்துள்ளது கோனா.

இந்தியாவின் முதல் மின்சார எஸ்.யு.வி காரான கோனாவின் என்ஜின் 134 பிஹெச்பி சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டது என்பதால் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 9 புள்ளி 7 விநாடிகளில் எட்டிவிடும். கோனா எலெக்ட்ரிக் காரின் உச்சபட்ச திறன் 201.2 பிஹெச்பி ஆகும். எரிபொருளாகப் பயன்படும் மின்சாரத்தை சேமிக்க ஈக்கோ, ஈக்கோ பிளஸ் – வேகத்தை விரும்புவோருக்கு ஸ்போர்ட்ஸ் என பலவித நிலைகளில் இயங்கும் விதத்தில் இதன் எஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூப்பர் சார்ஜிங் முறையில் கோனா எஸ்யூவி-க்கு 54 நிமிடங்களில் 80% வரையில் சார்ஜ் செய்ய முடியும். 64 கிலோவாட் திறன் கொண்ட லித்தியன் ஐயான் பேட்டரி இதில் உள்ளதால், 100% சார்ஜ் செய்தால் 452 கிலோ மீட்டர்களை இந்தக் காரில் கடக்கலாம். நிலையாக ஓரிடத்தில் பொருத்தக் கூடியது மற்றும் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லத்தக்கது என்று 2 விதமான சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன.

இதன் ஆன் போர்ட் சார்ஜரின் செயல்திறன் 7.2 கிலோ வாட் ஆகும். சிசிஎஸ் டைப் 2 சார்ஜரில் சார்ஜ் செய்தால் முழு பேட்டரியையும் சார்ஜ் செய்ய 6 மணி நேரம் 10 நிமிடங்கள் வரை ஆகும். டி.சி ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தினால் 57 நிமிடங்களில் 80% வரையில் சார்ஜ் செய்ய முடியும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் குறிப்பிட்ட பங்குகளில் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த கோனா காரின் பேட்டரிக்கு 3 ஆண்டுகளும், ஒரு லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் வரையிலான பயணத்திற்கு வாரண்டியும் வழங்கப்படுகிறது.

5 வண்ணங்களில் விற்பனைக்கு வரும் இந்த கார் இந்திய சந்தையில் மத்திய அரசின் வரி நீங்கலாக 25 லட்சத்து 30 ஆயிரம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டை முழுவதுமாக குறைக்கும் வகையில் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. துளிகூட மாசு ஏற்படுத்தாமல் பயணம் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழலை எந்த விதத்திலும் இது பாதிக்காது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக கோனா இருக்கும் என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது.

மத்திய பட்ஜெட்டில் எலக்ட்ரிக் கார்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கோனா கார் விற்பனைக்கு வருவதால், வரிச் சலுகைகளுக்காகவும் – குறைந்த மின்சாரத்தில் அதிகதூர பயணம் செய்யும் வசதிக்காகவும் மக்கள் இதனை விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதைக்கு வேறு எந்த மின்சார எஸ்.யூ.வி. கார்களும் இந்திய சந்தையில் இல்லை என்பதால் இதன் செயல்திறனை வேறு கார்களோடு நாம் ஒப்பிட முடியாது. அதே நேரம் எலக்ட்ரிக் கார்களின் சந்தை எதிர்காலத்தில் அதிக போட்டி உடையதாக மாறும் என்பது உறுதி.

Exit mobile version