ஹூண்டாய் மற்றும் உபெர் நிறுவனங்கள் இணைந்து, பறக்கும் கார் மாடலை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்துள்ளன.
மக்களின் எண்ணிக்கை அதிகமாவதால், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. இதனால், வாகன நெரிசல் அதிகமாகிறது. இந்த நிலையில், ஒரு பறக்குற கார் இருந்தால் நன்றாக இருக்கும் என பலரும் நினைப்போம். அவர்களின் கனவிற்கு செயல் வடிவம் கொடுக்க இருக்கிறது, ஹூண்டாய் மற்றும் உபெர் நிறுவனங்கள்.
இந்நிறுவனங்கள் இணைந்து பறக்கும் காரை உருவாக்கி வருகின்றன. புதிய பறக்கும் வாகனம், கான்செப்ட் எஸ்-ஏ1 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாகனம், 2020 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களின் கூட்டணியில், ஹூண்டாய் நிறுவனம் பறக்கும் வாகனங்களை தயாரித்து வழங்கும். உபெர் மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான வான்வழி சேவை, தரைவழி போக்குவரத்திற்கான இணைப்புகள், நுகர்வோர் இன்டர்ஃபேஸ்களை, ஏரியல் ரைடு ஷேர் நெட்வொர்க் மூலம் வழங்க இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம், உபெர் எலிவேட் உடன் இணைந்து, தனிப்பட்ட பறக்கும் வாகனமான எஸ்-ஏ1 மாடலை உருவாக்கி இருக்கிறது. இதன் மூலம், வாகனத்தை தரையில் இருந்து செங்குத்தாக மேலே பறக்கச் செய்து, தரையிறங்க வைக்க முடியும். புதிய கான்செப்ட் விமானம், மணிக்கு 290 கிலோமீட்டர் வேகத்திலும், தரையில் இருந்து சுமார் 1000 அடி உயரத்தில் பறக்கும் திறனையும் கொண்டது. மேலும், 100 கிலோமீட்டர் வரை தொடர்ச்சியாக இதனால் பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
முழுமையாக எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்கும் இந்த வாகனத்தை, முதற்கட்டமாக ஒருவர் இயக்கும் வகையிலும், எதிர்காலத்தில் தானியங்கி முறையில் இயங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் பறக்கும் கார் சந்தைக்கு வரும் என்று வாகனப் பிரியர்கள் எதிர்நோக்கி காத்திருகிறார்கள்…