இந்தியாவில் ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஹைபர்லூப் வாகனங்கள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐநூறு கிலோ மீட்டர் தூரத்தை ஐந்து மணி நேரத்தில் கடந்து விடலாமா என துடிக்கும் காலம் இது. ஆனால் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்கள் ரொம்ப சாதாரணம். நம் நாட்டிலும் அப்படி வேகமாக செல்லும் ரயில்கள் மிக விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹைப்பர்லூப் டி டி நிறுவனம் தனது முதலாவது ஹைப்பர்லூப் வாகனத்தின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது.
32 மீட்டர் நீளமும், 5 டன் எடையும் கொண்ட இந்த வாகனத்தின் சிறப்பம்சமே இதன் வேகம் தான். ஆம் இந்த வாகனம் மணிக்கு ஆயிரத்து 223 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாயும் என்கிறார்கள்..
இந்த ஆண்டு இறுதிக்குள் பிரான்ஸ் நாட்டில் பயன்பாட்டுக்கு வருமென அந்நிறுவனத்தின் தலைவரும், இணை நிறுவனருமான பிபோப் கிரேஸ்ட்டா தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்தியாவில் இவ்வாகனத்தை இயக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.