ஐதராபாத் மருத்துவர் கொலை விவகாரம் மாநிலங்களவையில் எதிரொலி

ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

ஐதராபாத் கால்நடை மருத்துவர் கொலை விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் பேசினார். அப்போது, நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளதாகத் தெரிவித்தார். இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 4 பேரையும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தினார். இதற்காக விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும், தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்றும் விஜிலா சத்தியானந்த் குறிப்பிட்டார். அதன்பின் பேசிய சமாஜ்வாதிக் கட்சி உறுப்பினர் ஜெயா பச்சன், இந்தக் கொடுங்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பொது இடத்துக்குக் கொண்டுவந்து அடித்துக் கொல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்துப் பேசிய அவைத் தலைவர் வெங்கைய நாயுடு, கொடிய குற்றங்களைக் கட்டுப்படுத்த விருப்பமும், நிர்வாகத் திறமையும், மக்களின் மனநிலையில் மாற்றமும் வேண்டும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version