ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜிவ் பாக்டி என்பவர் நிலவில் 5 ஏக்கர் நிலம் வாங்கி , குடும்பத்துடன் நிலவுக்கு சுற்றுலா செல்ல இருப்பதாக கூறியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்க செய்துள்ளது.
சந்திராயன் 2 விண்கலமானது ஜூன் 22ம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த சாதனையை
இந்தியா முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த மிகப் பெரிய தொழிலதிபர் ராஜிவ் பாக்டி என்பவர் ,கடந்த 2003-ம் ஆண்டு 140-டாலர் கொடுத்து நிலவில் 5-ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இதற்காக அமெரிக்காவில் உள்ள நிலவு நிலப்பதிவு அலுவலகத்தில் அவர் அத்தாட்சியும் வாங்கியுள்ளார். மேலும் தொழிலதிபர் ராஜீவ் பாக்டி கருத்துத் தெரிவிக்கையில் ”சந்திரயான் 2” விண்கலம் புதிய சாதனை படைக்க உள்ளது எனவும், நான் ஏற்கனவே நிலவில் ‘மரே இம்பிரியம்’ என்ற இடத்தில் 5-ஏக்கர் நிலம் வாங்கியுள்ளேன், விரைவில் குடும்பத்துடன் “ நிலவுக்கு சுற்றுலா செல்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் 1979-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விண்வெளி ஒப்பந்த அடிப்படையின்படி, நிலவு உட்பட விண்வெளிப் பொருட்கள் மீது யாரும் உரிமை கொண்டாட முடியாது. இந்த ஒப்பந்தத்தை இந்தியா உட்பட 100 நாடுகள் கையெழுத்து இட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சிட்டியில் உள்ள நிலவு நிலப்பதிவு அலுவலகம் கூட முற்றிலும் அரசு அனுமதியுடன் தான் செயல்படுகிறது என கூற முடியாது.
இதனால் நிலவில் நிலம் விற்கும் நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வமான எந்த ஒரு அதிகாரமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ’நான் ஜெயிலுக்கு போறேன் ,ஜெயிலுக்கு போறேன்’ என்ற வடிவேல் வசனத்தை போல ராஜிவ் பாக்டி “நிலவுக்கு போறேன் நிலவுக்கு போறேன்” என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.