திருவள்ளூர் அருகே கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அடுத்த தண்டரை பகுதியை சேர்ந்தவர் ராஜி. கூலித் தொழிலாளியான இவருக்கும், ஆந்திர மாநிலம் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த கௌரிக்கும் திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.
தன் மனைவி மீது சந்தேகம் கொண்டிருந்த ராஜி, தினமும் குடித்து விட்டு வந்து, அவருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இந்த நிலையில் தான், கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் நாள், ராஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், குழந்தைப் பிறப்பில் சந்தேகப்பட்டு மனைவி கெளரியை அவதூறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கெளரி தூங்கிக்கொண்டிருந்த தன் கணவன் ராஜியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
இதுகுறித்து, 4 நாட்களுக்கு மாமியார் கமலா கொடுத்த புகாரின் அடிப்படையில் பட்டாபிராம் காவல்துறையினர் கௌரியை கைது செய்தனர். இந்த வழக்கின் முடிவில் கணவன் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி கௌரிக்கு நீதிபதி தீப்தி அறிவுநிதி ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும், அதனைக் கட்டத் தவறினால் 4மாதம் கூடுதல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிதார். இதனையடுத்து, காவல்துறையினர் கௌரியை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.