தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே நவீன் பட்டேலின் மகள் கிருத்திகா பட்டேல், உள்ளூரைச் சேர்ந்த மாரியப்பன் வினித் என்ற இளைஞரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். மகள் காணாமல் போனதாக நவீன் பட்டேல் கொடுத்த புகாரை விசாரித்த குற்றாலம் போலீஸார், மணமக்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்திருந்தனர். அப்போது நடந்த மணப்பெண் கடத்தல் சம்பவம் சர்ச்சையானது. விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு கடந்த 27-ம் தேதி இருவரும் வந்தனர். அப்போது கிருத்திகா தன்னுடைய கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் அவருடன் அனுப்பிவைத்தனர். வழியிலேயே காரில் வந்த நவீன் பட்டேல் மற்றும் அவரது குடும்பத்தினர், மணப்பெண் கிருத்திகாவைக் கடத்திச் சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், இணையத்திலும் கடத்தல் வீடியோ வைரலாகப் பரவியது.
இந்த நிலையில் இரண்டாவதாக வீடியோ ஒன்று கிருத்திகா பேசுவது போன்று வெளியாகி இருந்தது. அதில் கிருத்திகா, தனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது எனவும் வழக்கை வாபஸ் பெற சொல்லி, வினித் தரப்பு தன் தந்தையிடம் பணம் கேட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனை முற்றிலும் மறுத்துள்ள வினித், தன் மனைவியை பணயக்கைதியாக வைத்து இதுபோன்று பேச வைப்பதாகவும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.