எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.
சேலம் மாவட்டம் எடப்பாடி, பூலாம்பட்டி பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இந்த சூறாவளி காற்றில் பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. அதேபோல் பப்பாளி பழ மரங்களும், கரும்பு பயிர்களும் சாய்ந்தன. வேப்பமரத்துப்பட்டி பகுதியில் மின் கம்பங்கள் சாலையில் சாய்ந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல், ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள எரகனஹள்ளி கிராமத்தில் 4 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நூற்றுக்கும் மேலான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. 2 மாத காலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பல லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயி ராஜேந்திரன் வேதனை தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த இடி காரணமாக, ஆவாரம்பட்டி பகுதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் மண்பாண்டம் செய்யும் கூலித்தொழிலாளி ராமநாதன் என்பவர் மீது கட்டடம் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.