புரெவி புயலால், தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புரெவி புயலானது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து தென் தமிழக கடற்பகுதியில் பாம்பன்-கன்னியாகுமரி இடையே இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் எனவும், இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புரெவி புயலால் தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 70 கிலோ மீட்டர் முதல் 80 கிலோ மீட்டர் வேகம் வரை சூறைக்காற்று வீசும் என தெரிவித்துள்ளார்.
தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.