புலிகளின் உணவுப் பட்டியலில் மனிதர்களுக்கு இடம் இல்லை

புலிகளை ஆட்கொல்லிகள் என அழைக்கக் கூடாது – என்பது உள்ளிட்ட புதிய விதிகளை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வகுத்துள்ளது.

மனிதர்களோடு மோதலில் ஈடுபடும் புலிகளை மேன் ஈட்டர்ஸ் அதாவது ஆட்கொல்லிகள் என்று அழைக்கும் வழக்கத்தை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தனர். இந்த வழக்கத்தினால் அனைத்து புலிகளும் மனிதர்களைக் கொல்லும் – என்ற எண்ணம் மக்கள் மனதில் வேரூன்றிவிட்டது. உண்மையில் புலிகளின் உணவுப் பட்டியலில் மனிதர்களுக்கு இடம் இல்லை. சூழ்நிலை மற்றும் மனநலப் பிரச்னைகளால் சில குறிப்பிட்ட புலிகள் மட்டும் மனிதர்களைக் கொல்லக் கூடியவையாக மாறிவிடுகின்றன. இந்த சில புலிகளை மனதில் வைத்து அனைத்துப் புலிகளையும் ஆட்கொல்லிகளாகப் பார்ப்பது தவறானது.

இதனால், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையானது மனிதர்களுடன் மோதலில் ஈடுபடும் புலிகளை ‘ஆட்கொல்லிகள்’ என்று அழைப்பதை தடை செய்துள்ளது, அந்த சொல்லுக்கு மாற்றாக ‘மனித வாழ்வுக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய’ என்று பொருள்படும் ‘டேஞ்சரஸ் டூ ஹியூமன் லைஃப்’ (‘dangerous to human life’) என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று கூறி உள்ளது.

அத்தோடு, மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் புலிகளைப் பிடிக்கவோ, கொல்லவோ வனக் காவலர் அல்லாதவர்களைத் தற்காலிகமாகப் பணியமர்த்துவதையும் இந்த அறிக்கை தடை செய்கின்றது. இனி மனிதர்கள் அதிகம் வாழும் பகுதிக்குள் புலிகள் நுழைந்தால், கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி வனக்காவல்துறையில் உள்ள துப்பாக்கி சுடுதல் வல்லுநர்கள்தான் மயக்க ஊசிகளை ஏவும் துப்பாக்கிகள் மூலம் புலிகளைச் சுட முடியும்.

ஆட்கொல்லி என்ற வார்த்தை கைவிடப்படுவதை வரவேற்கும் விலங்குகள் நல ஆர்வலர்களில் பலர் ‘மனித வாழ்க்கைக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய’ என்ற வார்த்தையும் புலிகள் குறித்த தவறான பிம்பத்தையே ஏற்படுத்துவதாகக் கூறி அதனை எதிர்க்கின்றனர்.

கடந்த 2018ஆம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலத்தில், அவ்னி பெண்புலியானது 13 மனிதர்களைக் கொன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பிரபல துப்பாக்கி சுடும் வல்லுநர் ஒருவரைப் பணியமர்த்தி சுட்டுக் கொல்லப்பட்டது. வனத்துறைக்கு விலங்குகளைக் கொல்லும் அதிகாரம் இல்லை என்ற நிலையில் சிறப்பு அனுமதி பெற்று அவ்னி புலி கொல்லப்பட்டது. இதனால் எழுந்த பலத்த சர்ச்சைகளை அடுத்தே, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இந்தப் புதிய விதிகளை வகுத்துள்ளது.

புலிகளை மனிதர்கள் ஆட்கொல்லிகள் என்று இதுவரை அழைத்துவந்தாலும், புலிகளால் கொல்லப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கையை விடவும், மனிதர்களால் கொல்லப்பட்ட புலிகளின் எண்ணிக்கை 100 மடங்குக்கு அதிகம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

 

Exit mobile version