மனிதர்கள் உணர மறந்த, அழிவின் விளிம்பில் நிற்கும் அற்புதம் சிட்டுக்குருவி!

அழிவின் விளிம்பில் நிற்கும் அற்புதம், மனிதர்கள் உணர மறந்த மகத்துவம், சுயநலத்தால் சிறகொடிக்கப்பட்ட அரிய பறவைகள் வரிசையில் அபாய கட்டத்தில் இருக்கும் உயிரினமான சிட்டுக்குருவிகளை பாதுகாக்க என்ன செய்யலாம் என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…

சிட்டுக்குருவிகள்.. மனித குலத்திற்கு மிக நெருக்கமானவை. அச்சமின்றி வந்து தொட்டு விளையாடி போகும் அந்த அரிய பறவையின் நினைவுகள் அனைவருக்கும் மிச்சமிருக்கும்.

வீட்டு ஜன்னலில் அமர்ந்து நம்மை துயில் எழுப்பிய அந்த உயிர் அலாராங்களை, கதிர்வீச்சுகளால் கடிகாரத்திற்குள் மட்டுமே இப்போது காணமுடிகிறது. 

ஒரு கதவு தாழிடப்படும் போது மறு கதவின் மடை திறப்பது இயற்கை நியதி. அதன்படி மனித இனத்தின் சுய நலத்தால் சூறையாடப்படும் சிட்டுக் குருவிகளை காக்க சில மனிதருள் மாணிக்கங்கள் மகத்தான முயற்சியை செய்திருக்கிறார்கள்.

கான்கிரீட் காடுகளால் காவு வாங்கப்படும் பறவைகளை மனதில் வைத்து, இல்லத்தில் வைக்கும் வகையில் கூடுகளை வடிவமைத்து, அதனை எல்லோருக்கும் இலவசமாக வழங்கி வருகிறார்கள் பறவை காதலர்கள். 

சிட்டுக்குருவிகள் தினம், மார்ச் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளிச் சிறுவர்கள் இணைந்து 3 மணி நேரத்தில் 300 கூடுகளை அமைத்து அபார சாதனை நிகழ்த்தி காட்டியுள்ளனர். 

சிட்டுக்குருவிகளை வர்ணித்து ஆயிரம் கவிதைகள் இங்கு எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் சிட்டுகுருவிகளே ஒரு சிறந்த கவிதைதான்.

அதன் அழகியலும், அதில் பொதிந்திருக்கும் ஆச்சரியங்களும் சொல்லில் அடக்க முடியா உணர்வு. ஆனால் இயற்கையின் அந்த அரிய கவிதையான சிட்டுக்குருவியை  மனித இனம் பாதுகாக்க போகிறதா…?  இல்லை கிழித்தெழிய போகிறதா….? என்பது 21 ம் நூற்றாண்டின் இமாலய கேள்வி. 

 

Exit mobile version