சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் நடைபெற்றுவரும் அகழாய்வு பணிகளில், ஒரே குழியில் சமதள நிலையில், 7 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் 2014ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் மூன்று கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல்துறை நடத்திய நிலையில், 4, 5, மற்றும் 6ம் கட்ட அகழாய்வுப் பணிகளை அதிமுக அரசு முழுவீச்சில் நடத்தி முடித்தது.
இதை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏழாம் கட்ட பணிகளை துவக்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக கொந்தகை இரண்டாம் கட்ட பணிகளில் பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றில் இரண்டு முதுமக்கள் தாழிகளில் இருந்து மனித எலும்புக்கூடுகள் வெளிக் கொணரப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது ஒரே குழியில் சமதள நிலையில் ஏழு மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழர்களின் தொன்மையான, முதன்மையான நகர நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்க கூடிய இந்த அகழாய்வு பணிகள், உலகெங்கும் இருக்கக்கூடிய தமிழ் இனத்தின் அடையாளமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.