"ஹவுடி- மோடி" நிகழ்ச்சி:அமெரிக்காவின் உண்மையான நண்பன் இந்தியா – டிரம்ப்

புதிய இந்தியா கனவை நிறைவேற்ற கடுமையாக உழைத்து வருவதாக ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ‘ஹவுடி மோடி’ என்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அமெரிக்காவில் பிரதமர் மோடி 7 நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடியை, அவரது பெயரை கூறி உற்சாகமாக வரவேற்றனர்.

நிகழ்ச்சியின் துவக்கமாக, பரதநாட்டியம், குச்சிப்புடி உள்ளிட்ட நடனங்களுடன் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தி அசத்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க எம்.பி.க்கள் டெட் குரூஸ், ஜான் கார்னின், ஸ்டீனி ஹோயர், இந்தியா, அமெரிக்காவும் மிகப்பெரிய ஜனநாயக அரசியலை கொண்டது என தெரிவித்தனர். பின்னர் ஹூஸ்டன் நகர சாவியை மோடிக்கு மேயர் சில்வஸ்டர் டர்னர் வழங்கினார். மரியாதை நிமித்தமாக இந்த சாவி அவருக்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ‘கனவுகளை பகிருங்கள்; ஒளிமயமான எதிர்காலம்’ என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

உலக அரசியலை நிர்ணயிக்கும் நபராக அதிபர் டிரம்ப் விளங்குவதாக பாராட்டு தெரிவித்தார். அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் வலிமைமிக்கதாக மாற்றியவர் டிரம்ப் என்று மோடி குறிப்பிட்டார். இரு நாடுகளின் வளர்ச்சி புதிய உச்சத்தை தொட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப், பிரதமர் மோடிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறினார். அமெரிக்காவின் உண்மையான நண்பன் இந்தியா என்று குறிப்பிட்டார். இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய அமெரிக்க மருத்துவர்கள் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார். விண்வெளித்துறையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளும் அளப்பரிய வளர்ச்சியைப் பெற மோடியுடன் இணைந்து செயல்பட இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

30 கோடி மக்களை இந்திய அரசு வறுமையில் இருந்து மீட்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டார். மோடி தலைமையின் கீழ் இந்தியா வளர்ச்சி அடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மும்பையில் நடைபெற உள்ள உலக புகழ்பெற்ற என்.பி.ஏ விளையாட்டு போட்டியை காண வர வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.

தீவிரவாததுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்று குறிப்பிட்ட அவர், எல்லை பிரச்சனை இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு சவாலாக இருப்பதாக தெரிவித்தார்.

பின்னர், அதிபர் டிரம்ப் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, அனைவருக்காகவும், அனைவருடன் என்பதே அரசின் தாரக மந்திரம் என்றார். இந்தியர் அனைவரும் நலம் எல்லோரும் சவுக்கியம் என்று தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேசிய போது அரங்கம் அதிர்ந்தது.

ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், இந்தியாவுக்கு மிகவும் சவால் அளித்த காஷ்மீருக்கான 370வது பிரிவு நீக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் ஒரே சட்டம் என்பது நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். பெண்களுக்கு மறுக்கப்பட்ட நீதி நாடாளுமன்றம் மூலம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர், பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இருவரும் கைகோர்த்தவாறு அரங்கை சுற்றி வலம் வந்தனர். அப்போது மக்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர்.

Exit mobile version