கொரோனாவின் தாக்கம் ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் கோடையின் வெப்பம் நம்மை வாட்டத் தொடங்கி விட்டது.
அதோடு அக்னி நட்சத்திரமும் சேர இருக்கும் இந்த தருணத்தில், கோடை காலத்தை கூலாகச் சமாளிப்பது எப்படி என்று விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு…
கோடை காலம் என்றாலே சுட்டெரிக்கும் வெயில், வீசும் அனல்காற்று, இதை எப்படி நம் சமாளிக்க போகிறோம் என்பது அனைவருக்கும் எழும் ஒரே எண்ணமாகும்.
குறிப்பாக கோடை காலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், அதைச் சமாளிக்க தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதும், திரவ உணவை உட்கொள்வதும் உகுந்தது என்கிறார்கள் மருத்துவர்கள்.
மேலும், உடலை ஈரப்பதமாக வைத்துக் கொள்ளும் வழிமுறைகளைப் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்கின்றனர்.
நண்பகலில் கட்டாயம் வெளியில் செல்லவேண்டிய நிலையில் இருப்பவர்கள் குளுக்கோஸ், எலக்ட்ரால் பவுடர் உள்ளிட்டவற்றை கையுடன் எடுத்து சென்று பயன்படுத்திக் கொள்வதும் அழற்சியை தவிர்க்கும் என்று கூறும் மருத்துவர்கள், உணவுப் பழக்கமும் கோடையைச் சமாளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்கின்றனர்.
இதேபோல், தினமும் இரண்டு முறை குளிப்பதும், மா, பலா, வாழைப் பழங்களை உண்பது, வெயில் கால நோய்களான உடல் அழற்சி, தோல் நோய்கள், அம்மை நோய், சிறுநீரகக் கற்கள் ஏற்படுவது நீர்க்கடுப்பு, ஆகியவற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ள உதவும் என்கின்றனர் மருத்துவர்கள்
திட உணவுகளைக் குறைப்பதும், திரவ வகை உணவுகளை அதிகரிப்பதும், இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் ஆகியவற்றைக் குடிப்பதும் கோடையை குளிர்ச்சியாக்க உதவும்.
அதே நேரம் மிகுந்த குளிர்ச்சியான குளிர்பானங்கள் உட்கொள்வது பற்களுக்கு ஊறுவிளைவிப்பதாகவும் அமையும்.
முன்னெப்போதும் இல்லாத கோடையை இந்தாண்டு நாம் சந்தித்து வருகிறோம். வாட்டிவதைக்கும் வெயிலை சமாளிக்க, இயற்கை தந்துள்ள உணவுகளை உட்கொண்டு கோடையையும் குளுமையாக்குவோம்.