தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் எத்தனை கல்வெட்டுகள் மைசூரில் வைக்கப்பட்டன என்பது குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆறாம் நூற்றாண்டிலிருந்து கண்டறியப்பட்ட தொன்மையான சின்னங்கள் மைசூரில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை மீட்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உதகையில் தட்பவெப்பம் சரியில்லாததால் பாதுகாப்பு மையம் அமைக்க முடியவில்லை என மத்திய தொல்லியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மைசூரில் தமிழக வரலாற்று சின்னங்கள் எத்தனை உள்ளன என்பது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்தியாவில் உள்ள மொத்த கல்வெட்டுகள் குறித்தும், அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் விளக்கமளிக்க மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டனர். தமிழகத்தில் எடுக்கப்பட்ட கல்வெட்டுகளை மீண்டும் தமிழகத்திற்கு மாற்ற உத்தரவிட்டால், அரசு உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தருமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாநில தொல்லியல்துறை விளக்கமளிக்க ஆணையிட்டனர்.