மக்களவை சபாநாயகர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்?

மக்களவை சபநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் சபாநாயகர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்? அவரின் அதிகாரம், பணிகள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்

அரசியலமைப்பின் சரத்து 93ன் படி மக்களவைக்கு சபாநாயகர் ஒருவர் இருக்க வேண்டும். அவரது இடம் காலியானால் உடனடியாக வேறொரு உறுப்பினரை சபாநாயகராக தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான தேர்தல் தேதியை குடியரசுத் தலைவர் அறிவிப்பார். ஆளும் கட்சி சார்பில் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட உடன், பிரதமர் அல்லது நாடாளுமன்ற விவகார அமைச்சர் வேட்பாளரை முன்மொழிய வேண்டும். முன்மொழியப்பட்ட தீர்மானத்தை உறுப்பினர் யார் எல்லாம் ஏற்று கொள்கிறார்கள் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வழிமொழிய வேண்டும். முன்மொழியப்பட்ட உறுப்பினர், சபாநாயகரின் நாற்காலியை ஏற்க தயாராக இருப்பதை எழுத்துப் பூர்வமாக மக்களவை செயலர்க்கு அனுப்பி வைக்க வேண்டும்.

சபாநாயகர் தேர்தல், இடைக்கால சபாநாயகர் முன்னிலையில் நடைபெறும். அதிக உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளரை, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அவையை வழிநடத்துமாறு அழைப்பு விடுப்பார்கள், இதனை அடுத்து புதிய சபாநாயகர் உறுப்பினர்களின் வரவேற்புடன், நன்றி தெரிவித்து உரை நிகழ்த்துவார். தொடர்ந்து அவையின் தலைவராக செயல்படுவார்.

சபாநாயகரின் பங்கு, அதிகாரம் மற்றும் பணிகள் என்னென்ன என்று காண்போம். மக்களவை உறுப்பினர்களின் அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகள், ஒட்டுமொத்த அவை மற்றும் அதன் குழுக்கள் அனைத்திற்கும் பாதுகாவலராக திகழ்கிறார். அவையின் நடவடிக்கைகளில் சம வாக்கு என்ற நிலை ஏற்படும் போது சபாநாயகர் தனது வாக்கை செலுத்தி தேக்கநிலையை நீக்குவார். அவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களில் எவை பண மசோதா அல்லது பண மசோதா அல்ல என சபாநாயகரே முடிவு செய்து குடியரசுத்தலைவரின் முன் அனுமதிக்கு அனுப்புவார்.

Exit mobile version