ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்டப் போகிறீர்கள் என சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏப்ரல் 18ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து, அப்பகுதி மீனவர்கள் மீன் கடைகள் அமைத்துள்ளதாகவும், ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைப்பதாலும், வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும்; மாலை 4 மணி முதல் இரவு எட்டு மணி வரையும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
அந்த மனுவில், மீன் கடைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கும், மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை கோரியுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மாநகராட்சி தரப்பில், லூப் சாலையில் மீன் கடைகள் நடத்தும் மீனவர்களுக்காக 9 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் சந்தை அமைக்கப்பட்டு வருவதாகவும், பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆறு மாதங்களில் பணிகள் முடிந்து விடும் எனவும், அதுவரை மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி தற்காலிகமாக போக்குவரத்தை முறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, உரிமம் இல்லாத உணவகங்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சாலை ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், சாலையில் ஆக்கிரமிப்புக்கு தான் அனுமதியளிக்கப்படுகிறதே தவிர, போக்குவரத்துக்கு அனுமதியில்லை என்ற நிலை உள்ளது என அதிருப்தி தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், லூப் சாலையின் மேற்கு பகுதியில் 25 சதவீத சாலை மட்டுமல்லாமல், நடைபாதையையும் ஆக்கிரமித்து சிறு உணவகங்கள் செயல்படுகின்றன எனவும் மீன் கழுவுவதற்காகவா சாலைகள் எனவும் கேள்வி எழுப்பினர்.
நடைபாதையை ஆக்கிரமித்து உணவகங்களுக்கு எப்படி உரிமம் வழங்கப்பட்டது எனவும், பொது சாலையை ஆக்கிரமிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் சமரசம் செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்டப் போகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏப்ரல் 18ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
லூப் சாலையின் மேற்கு பகுதியில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், மேற்கு பகுதியில் உள்ள உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Discussion about this post