ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என மனுதாரரும், தமிழ்நாடு மின்பகிர்மான கழகமும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், முந்தைய மாத கட்டண அடிப்படையில் பணம் செலுத்தலாம் எனவும், பின்னர் கணக்கீடு செய்யும் போது, செலுத்திய தொகையை கழித்து, மீதமுள்ள மின் பயன்பாட்டிற்கு கட்டணம் செலுத்தலாம் என மின்சார வாரியம் அறிவித்தது. இந்த உத்தரவை ரத்து செய்து, இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி பில் ஆகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான பில் ஆகவும் நிர்ணயித்து தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிடக் கோரி, ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில், மின் கட்டண கணக்கீட்டில் விதிமீறல் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. காணொலி மூலம் வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது குறித்து இருதரப்பும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 6ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Discussion about this post