அரசு அறிவித்தபடி தமிழகத்தில் மருத்துவமனை தினம் இன்று கொண்டாடப்படுவதால், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாள் இன்று. இந்த நாள் மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும் என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 16ம் தேதி சட்டசபையில் அறிவித்தார். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவமனை தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் செயல்பாடு, சாதனை மற்றும் சிறப்புகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவமனை தினம் கொண்டாடப்பட உள்ளது.மருத்துவமனையின் சாதனைகள், அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்த சிறப்பு கண்காட்சி நடத்தப்படுகிறது. சிகிச்சை முறைகள் குறித்து பயனாளிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும். சிறப்பாக பணியாற்றும் மருத்துவமனை ஊழியர்களை கவுரவிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.