கோவளம் தாஜ் விடுதியில் கடற்கரையோரம் உள்ள மண்டபத்தில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இருவரும் சுமார் 50 நிமிடம் பேச்சு நடத்தினர். அதன்பின் அரங்கை விட்டு வெளியேவந்த இருவரும் திறந்த வெளியில் கடற்கரையின் எழிலைக் கண்டுகளித்தபடி சற்று நேரம் உரையாடினர். அதன்பின் அங்கிருந்து பேட்டரி காரில் புறப்பட்டு விடுதிக் கட்டடத்துக்குச் சென்றனர்.
அதன் பின்பு, தாஜ் விடுதியில் உள்ள கூட்ட அரங்கில் இரு நாட்டுத் தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சீனா சார்பில் அதிபர் ஷி ஜின்பிங், வெளியுறவு அமைச்சர் வாங் இ மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது மதிப்புக்குரிய விருந்தினரை வரவேற்கிறேன் எனப் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வரவேற்றார்.
சீனாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே ஆழமான பண்பாட்டு, வணிகத் தொடர்புகள் நிலவி வந்துள்ளதைப் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். இந்தியாவும் சீனாவும் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பொருளாதார சக்திகளாக விளங்கி வருவதாகக் குறிப்பிட்டார். சீனாவின் ஊகானில் நடைபெற்ற சந்திப்பு இரு நாட்டு உறவுகளில் நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும், மாமல்லபுரச் சந்திப்பு இருநாட்டு உறவுகளில் புதிய சகாப்தத்தின் தொடக்கம் எனவும் மோடி தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், தமிழகத்தின் விருந்தோம்பல் தங்களை மிகவும் ஆட்கொண்டுவிட்டதாகத் தெரிவித்தார். தானும் தன்னுடன் வந்தவர்களும் இந்த விருந்தோம்பலைக் கண்டு வியப்படைவதாகத் தெரிவித்தார். மாமல்லபுரத்துக்கு வந்தது எப்போதும் நினைவில் நிற்கும் ஓர் அனுபவமாகத் தனக்கும் தன்னுடன் வந்தவர்களுக்கும் அமையும் எனத் தெரிவித்தார்.