புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை

திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைத்து விடியா அரசை வீட்டுக்கு அனுப்புவோம், தமிழ்நாட்டை மீட்டெடுப்போம் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் அண்ணா திமுகவினர் உறுதி மொழி ஏற்றுள்ளனர்.

அஇஅதிமுக நிறுவனத் தலைவரும், புரட்சித் தலைவருமான எம்.ஜி.ஆரின் 34-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள புரட்சித் தலைவி நினைவிடத்தில் அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் நினைவிட வளாகத்தில் அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் இலக்கிய அணி மாநில செயலாளர் வைகைச் செல்வன் உறுதி மொழி வாசிக்க கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

அராஜக ஆட்டமாடும் திமுகவை ஒடுக்குவதற்கு தனி களம் கண்டவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., நம் உணர்வில் கலந்தது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., நம் உதிரத்தில் கலந்தது புரட்சித் தலைவி ஜெயலலிதா என்றும் உறுதிமொழியில் குறிப்பிட்டனர்.

திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைத்து விடியா அரசை வீட்டுக்கு அனுப்புவோம், தீய சக்தியை அடியோடு அழிப்போம், தமிழ்நாட்டை மீட்டெடுப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.

இந்த நிகழ்வில், அண்ணா திமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம், செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டு புரட்சித் தலைவருக்கு மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதே போல், அண்ணா திமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் புரட்சித் தலைவர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Exit mobile version