மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்களை பெற வீடு தேடி டோக்கன்!

மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்களை பெற, குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடைகள் மூலம் சுமார் ஒரு கோடியே 89 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் விலையின்றி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே, மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விலையின்றி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக வழங்கப்படும் அரிசி மற்றும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவை அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன் வரும் 24, 25ம் தேதிகளில் வீடு தேடி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதில், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் உரிய நேரத்தில், சமூக இடைவெளியை கடைபிடித்து, பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை விலையின்றி பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version