திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

தென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு இலங்கை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்த நிலையில், சென்னையில் அதிகாலையில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், நுங்கம்பாக்கம், வடபழனி மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதேபோல், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையை தொடர்ந்து திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பகுதியில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால், கொல்லிமலை வட்டாரத்தில் உள்ள 68 பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version