ஹோலி பண்டிகையையொட்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வண்ணப்பொடிகளை தூவி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அஹமதாபாத்தில் கூடிய இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவியும் நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தக்காளி பழங்களைக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் அடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். வாரணாசி பகுதியிலும் வண்ணப்பொடிகளுடன் திரண்ட பொதுமக்கள் ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சட்டீஸ்கர் தலைநகர் ராய்பூரில் குவிந்த இளைஞர்கள் பலர் மேளதாளங்களுடன் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில் இளைஞர்கள், பெரியவர்கள், உள்பட தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர்களும் இக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, லக்னோ, உள்ளிட்ட நகரங்களிலும் ஹோலி கொண்டாட்டம் களை கட்டியது.