தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்டும் ஆதிவாசி பழங்குடியின மக்கள், தேனடைகளை கொண்டு சோப்பு, மெழுகு வர்த்தி மற்றும் சீயக்காய் பொடி உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்து லாபம் ஈட்டி அசத்தி வருகின்றனர். இது பற்றி தொகுப்பு
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் மற்றும் பங்களாபடுகை கிராமங்களில் ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயத்தையே முதன்மை தொழிலாக கொண்ட இவர்கள் தற்போது தேனீ வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். உடல் ஆரோக்கியம், எடை குறைப்பு மற்றும் உடல் எடை கூடுதல் என பல்வேறு நன்மைகளை புரியும் தேனை கொடுக்கும் தேனீ வளர்ப்பு தற்போது மலை கிராமங்களில் வாழ்வாதாரமாக மாறி வருகிறது. இதற்கு உதவும் வகையில் தேனீ வளர்ப்பு குறித்து கோத்தகிரியிலுள்ள Key Stone என்ற தொண்டு நிறுவனம் இவர்களுக்கு தேனீ வளர்ப்பிற்கு முறையான பயிற்சியளிப்பதோடு மட்டுமல்லாமல், தேனீ வளர்ப்பிற்கு இலவசமாக தேன் பெட்டிகளையும் வழங்கி வருகிறார்கள். நம் நாட்டில் நான்கு வகையான தேனீக்கள் உள்ளன.
தேனீக்களின் மகரந்த சேர்க்கையான ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதம் வரை அதிகமாக தேன்கள் நமக்கு கிடைக்கிறது. இந்த கால கட்டத்தில் 400 முதல் 500 கிலோ வரை தேன் கிடைப்பதால் கிலோ ஒன்றுக்கு 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விலை கிடைப்பது அப்பகுதி மக்களுக்கு பேருதவியாக உள்ளது. குறிப்பாக பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், மகளிர் மேம்பாட்டு குழுக்கள் மூலம் தேனடைகளை கொண்டு மெழுகு வர்த்தி, சோப்பு வகைகள் மற்றும் பேக்கிங் பைகள் தயாரிக்கப்படுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் வனப்பகுதிகளிலிருந்து கிடைக்கும் சியாக்காய் மற்றும் பூச்சை காய் இவைகளை கொண்டு Shampoo உள்ளிட்ட பொருட்களும் தயாரிக்கப்படுகிறது.
மேலும் மலை பயிர்களான குருமெழுகு, ஜாதிக்காய், ஏலக்காய் மற்றும் பூண்டு இவைகளை கொண்டு ஜாம் உள்ளிட்டவைகளிலும் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காடுகளுடன் இணைந்து வாழும் மலைவாழ் மக்கள் காடுகளின் மூலம் நல்ல லாபம் ஈட்டி தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகின்றனர்.