2011ல் 0.38% இருந்த எச்.ஐ.வி தொற்று 2019ல் 0.18%-ஆக குறைந்துள்ளது -முதலமைச்சர்

தமிழகத்தில் எச்.ஐ.வி தொற்று விகிதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் எச்.ஐ.வி பாதிப்பு 2019ல் 0.38 சதவீதத்திலிருந்து, 0.18 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மூவாயிரத்து 161 நம்பிக்கை மையங்கள் மற்றும் 16 நடமாடும் நம்பிக்கை மையங்கள் மூலம், எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளப்படுவதோடு, 216 பால்வினை நோய்தொற்று சிகிச்சை மையங்கள் மூலம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அதோடு 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும், 174 இணை கூட்டு சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு நோய் பரவாமல் தடுக்க, மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையங்களிலும், கூட்டு மருந்து சிகிச்சை மையங்களிலும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், சிகிச்சைக்குச் செல்ல கட்டணமில்லா பேருந்து பயண அட்டை உள்ளிட்ட அரசின் திட்டங்களையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

மேலும் 2 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் மாநிலம் முழுவதும் 34 இளைப்பாறுதல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, இந்த நிதியாண்டு முதல் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமிழகத்தில் எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க உறுதியேற்போம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version