கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், வயிற்றில் வளரும் சிசுவுக்கு எச்.ஐ.வி வைரஸ் பரவாமல் தடுக்க 99 சதவீதம் வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணியான, தங்கபாண்டி என்பவரின் மனைவிக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணியின்போது அலட்சியமாக செயல்பட்ட இரத்த வங்கியை சேர்ந்த 3 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எச்.ஐ.வி தொற்று கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் ரத்த வங்கித்துறை தலைவர் சிந்தா தலைமையில் உயர்மட்ட தொழில்நுட்ப குழுவை அமைத்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனிடையே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரத்த வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் ரத்தத்தை, மறு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.