சர்வாதிகாரத்தின் அழிவுக்கு சாட்சியான ஹிட்லர் மறைந்த தினம் இன்று!

இனவெறி கொண்டவர்களின் கையில் சர்வ அதிகாரமும் கிடைத்தால் என்னென்ன நடக்கும் என்பதற்கு ஹிட்லரின் வரலாறே சாட்சி. 20-ம் நூற்றாண்டின் மத்தியில் ரத்த சகதியில் குளித்து, உலகை நடுங்க வைத்தவர் குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்…

ஜெர்மனியில் 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி பிறந்த ஹிட்லரின் இயற்பெயர், அலாய்ஸ் ஷிக்கெல்கிரபர் (( Alois Schicklgruber )).

சிறுவயதில் பெற்றோரை இழந்த பின் பிழைப்புக்காக வியன்னாவுக்குச் சென்ற ஹிட்லரின் கண்களை உறுத்தியது யூதர்கள் இனம். பல்லாயிரக்கணக்கானோர் பசி பஞ்சத்தில் அவதிப்படும் போது, ஒரு யூத ஏழைக்கூட இல்லையே என யோசித்தார். இது அவரின் சிந்தனைப் போக்கில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது.

1914 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த ஹிட்லரின் மனதில் அகண்ட ஜெர்மனி, ஒரே நாடு ஒரே இனம் என்ற கனவு தனல் போல் எரிந்துக் கொண்டே இருந்தது. யூத எதிர்ப்பைக் கொண்டிருந்த ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் இணைந்த ஹிட்லர், குறுகிய காலத்திலேயே தனது பேச்சுத் திறமையால் கட்சியின் தலைமைப் பொறுப்பைப் பெற்றார். கட்சியின் பெயரை நாஜி என மாற்றினார்.

1932 ஆம் ஆண்டு தேர்தலில் வென்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த அவர் சூழ்ச்சி செய்து,1933-ம் ஆண்டு அதிபர் பதவியை பறித்துக்கொண்டார். அந்த நொடி முதலே தன்னை சர்வாதிகாரியாக அறிவித்துக்கொண்டார் ஹிட்லர். தங்களுக்கு முன் 3 தலைமுறை யூத இனத்தை சேர்ந்தவர்கள் இல்லை என நிரூபிக்க தவறியவர்களை இரண்டாம் குடிமக்களாக அறிவித்து குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தினார்.

1940-ல் டென்மார்க், நார்வே, பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்து, யூகோஸ்லாவியா, கிரீஸ் ஆகிய நாடுகளை கைப்பற்றினார். கைப்பற்றிய பிராந்தியங்களிலும் யூத ஒழிப்பு மட்டுமே முதல் நடவடிக்கையாக இருந்தது. யூதர்களை குடும்பம், குடும்பமாக லாரியில் ஏற்றி முகாம்களில் அடைத்து, அவர்களை தினம்தோறும் எண்ணிக்கை அடிப்படையில் கொன்று குவித்தனர் ஹிட்லர் சகாக்கள். மனித குல சரித்திரத்தில் ஹிட்லர் மேற்கொண்ட யூதப் படுகொலைகளைப் போல் உக்கிரமான இன்னொரு இனப்படுகொலைச் சம்பவம் கிடையாது. 60 லட்சம் யூதர்கள் கொலை செய்யப்பட்டனர். தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற இறுமாப்பில் 2ம் உலக போருக்கு வித்திட்டு இங்கிலாந்து, பிரான்ஸ் மீது படையெடுத்த அவரின் பாட்சா பழிக்கவில்லை. ஏப்ரல் 30 ஆம் தேதி ரஷ்ய படைகள் கோட்டையை நெருங்கிய போது, துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் ஹிட்லர்.

அன்றைய தினம் 12 ஆண்டுகள் ஐரோப்பாவை அச்சுறுத்திய அவரின் ஆட்டம் முடிவடைந்ததோடு, அடுத்த சில வாரங்களில் 2 ஆம் உலகப்போரும் முடிவுக்கு வந்தது.

Exit mobile version