பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 110ஆக அதிகரித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் லட்சக்கணக்கானோர் உடமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களுக்கு சென்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வெள்ளம் பாதித்த இடங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை தொடரும் என்பதால் பீகார் மாநிலத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் நிதிஷ் குமார், மத்திய அரசின் உதவியை நாடியுள்ளார்.