இந்திய வரலாற்றில் முப்படைகளின் முதல் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டு உள்ளார்.
1958ஆம் ஆண்டில் பிறந்த பிபின் ராவத் தனது பள்ளிக் கல்வியை சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியில் முடித்தார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசியப் பாதுகாப்பு அகாடமியில் படித்தார். பின்னர் கடந்த 1978-ஆம் ஆண்டில் டேராடூனில் உள்ள இந்திய ராணுவப் பயிற்சி நிலையத்தின் பதினோராவது கூர்க்கா படை ஆயுதப் பிரிவின் ஐந்தாவது படையணியில் பிபின் ராவத் இணைந்தார்.
பின்னர் அங்கு பல்வேறு பதவி உயர்வுகளைக் கண்டு, இராணுவப் பயிற்சி அளிக்கும் அதிகாரியாக பிபின் ராவத் பணியாற்றினார். மேலும் ராணுவச் செயலர் பிரிவில், ராணுவத் துணைச் செயலாளராகவும், ராணுவச் செயலாளராகவும் அவர் பணியாற்றி உள்ளார். வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்த பின்னர், தேசியப் பாதுகாப்புக் கல்லூரியிலும் பிபின் ராவத் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றார். சென்னைப் பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார்.
காஷ்மீர் பள்ளத்தாக்குகள், இந்தியா-பாகிஸ்தான் எல்லை, இந்தியா-சீனா எல்லை ஆகிய பகுதிகளில் இவர் இராணுவ சேவையாற்றி அனுபவம் பெற்று உள்ளார். காங்கோ நாட்டில் சர்வதேச இராணுவத்தில் பணியாற்றிய பின்னர் அங்கு சர்வதேச இராணுவத்திற்கு தலைமை தாங்கும் வாய்ப்பையும் அவர் பெற்றார். தகுதி மற்றும் அனுபவ அடிப்படையில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு டிசம்பரோடு அவரது பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில் இந்திய முப்படைகளின் முதல் தலைமைத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவருக்காக இராணுவ விவகாரங்கள் என்ற தனித் துறை ஏற்படுத்தப்பட உள்ளது. முப்படைகளின் தளபதி இதன் தலைவராக இருப்பார். மற்ற மூன்று தளபதிகளைப் போல இவருக்கும் 4 நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. முப்படைகளின் தளபதியால், ராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஆனால் தரைப்படை, விமானப்படை, கப்பற்படை தளபதிகளிடம் அரசின் முடிவுகளைத் தெரிவித்து அவற்றைச் செயல் வடிவத்திற்குக் கொண்டுவரும் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்ற முடியும். மேலும் ஆயுதங்களை வாங்குவது, முப்படைகளின் கூட்டு நடவடிக்கை போன்றவற்றை ஒருங்கிணைக்கும் பணியையும் முப்படைகளின் தலைமைத் தளபதியே மேற்கொள்வார்.