புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும், தலைவி படத்தில், வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட தலைவி படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தலைவி படத்தை பார்த்தபின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அரசியல் நிகழ்வுகளை திரைப்படமாக்கும் முயற்சியில், படக்குழுவினர் வெற்றி பெற்றிருப்பதாக பாராட்டு தெரிவித்தார். பெண்மணியாக இருந்து ஆணாதிக்க சமுதாயத்தில் துணிச்சலாக சாதித்து காட்டிய புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி திரைப்படம் பதிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.
அதேநேரம், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை பற்றி சில காட்சிகளில் திரித்து கூறப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்தார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எந்த பதவிக்கும் ஆசைப்படாதவர் என்றும், பேரறிஞர் அண்ணாவே அமைச்சர் பதவி வழங்கிய போது அதை வேண்டாமென மறுத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதியின் பெயரை பரிந்துரைத்து முதலமைச்சர் பதவியில் அமர்த்தியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என்று கூறிய அவர், கருணாநிதியிடம், எம்.ஜி.ஆர் அமைச்சர் பதவி கேட்பதுபோல் படத்தில் வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளதாகவும், அது உண்மையில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கும், புரட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும் திமுக கொடுத்த தொல்லைகள் படத்தில் இடம்பெறவில்லை எனக்கூறிய அவர், வரலாறு என்பது முழுமையாக சொல்லப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது போல், தலைவி படத்தில் உள்ள, உண்மைக்கு மாறான காட்சிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.