கொடைக்கானல் மலைக்கிராமங்களில் மறைந்துகிடக்கும் வரலாற்று சிற்பங்கள்

கொடைக்கானல் மலைக்கிராமங்களில் மறைந்துகிடக்கும், ஏராளமான வரலாற்று சிற்பங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 600 சதுர கிலோமீட்டர் அளவில் அமைந்துள்ள கொடைக்கானல் மலைப்பகுதியானது, இயற்கை எழில் கொஞ்சும் மிகப் பிரபலமான சுற்றுலாத்தலமாகும்.

இங்கு, பலருக்கும் தெரியாத வகையில், மிகவும் தொன்மையான கற்கால நாகரீக தடயங்கள், கற் சிற்பங்கள், ஆதிமனிதன் வாழ்ந்த கற்குகைகள், கற் தூண்கள் பெருமளவில் மறைந்து கிடப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக 3000 ஆண்டுகளுக்கு முந்தய ஆதிமனிதர்கள், குள்ள மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களாக, தாண்டிக்குடி,பேத்து பாறை ஆகிய கிராம பகுதியில் உள்ள கற்குகைகள் இருக்கின்றன.

மேலும், அடுக்கம் ஊராட்சி பகுதியில் பாண்டியர் காலத்து வணிக பாதைகளான தலைவாசல்கள், கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ,

இதே போலவே, மேல்மலை கிராமமான பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ள, பழமை வாய்ந்த குழந்தை வேலப்பர் கோவிலானது, சேரமன்னர் காலத்தில் செதுக்கப்பட்ட கற்சிற்பங்களை கொண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது .

இதுவரை நாம், முறத்தால் புலியை விரட்டியடித்த தமிழ்ப் பெண்னை பற்றி தான்படித்திருக்கின்றோம்.

ஆனால், இங்கு காணப்படும் பழமையான கற் சிற்பம் ஒன்றில், வீர மங்கை ஒருத்தி தன்னை தாக்க வரும் கொடிய புலியின் வயிற்றில் ஒரு கையாலும், மற்றொரு கையால் அதன் கழுத்திலும் குருவாள் கொண்டு, குத்துவது போல் செதுக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்காலத்திலேயே, பெண்கள் போர் பயிற்சியில் வீரத்தோடு ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு அடையாளமாக, கையில் வில், அம்புடன் இருக்கும் பெண்ணின் கற்சிலையையும் காணமுடிகிறது.

இது தவிர, இயல் ,இசை,நாடகம், ஆகியவற்றை பிரதிபலிக்கும் கற்சிற்பங்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன.

இதுகுறித்து பேசிய பூம்பாறை கிராம மக்கள், இங்குள்ள பல்வேறு இடங்களில் பழைமைவாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க சிற்பங்கள் புதைந்துள்ளதாகவும் தொல்லியல் துறையினர் ஆய்வுசெய்து, மீட்டெடுத்து பாதுகாக்கவேண்டும் எனவும், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version