இந்து அறநிலையத்துறை தேவையில்லை என்ற வாதம் சமீப காலமாக எழுந்துள்ளது. ஏன் அறநிலையத் துறை தேவை?

இந்து சமயத்தில் உள்ள  திருக்கோயில்களின் நிர்வாகத்தை முறையாகப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் 1925-ஆம்ஆண்டில் `இந்து சமய அறநிலைய வாரியம்` ஏற்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இந்து கோவில்கள், அறநிறுவனங்கள் மற்றும் திருமடங்கள் இந்த வாரியத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 1951ல் இந்து சமய அறநிலைய வாரியம் கலைக்கப்பட்டது. பின்னர் அரசுத் துறையாக செயல்பட வழிவகை செயல்பட ஆரம்பித்தது. 1959- ஆம் ஆண்டிலிருந்து அமலில் இருந்த இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் நடைமுறைபடுத்துவதில் சில இன்னல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இவற்றினை சரி செய்யவும் பல்வேறு திருத்தங்களை ஒருங்கிணைக்கவும் 1959-ஆம் ஆண்டில் இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் 22/1959 இயற்றப்பட்டது. 01.01.1960 முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. 1959-ஆம் ஆண்டு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தில் காலத்திற்கேற்ப சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இச்சட்டத்தின் மூலம் நிர்வாகத்தினை விரிவுபடுத்தி ஆணையர் மற்றும் சார்நிலை அலுவலர்களின் அதிகார வரம்புகளை வரையறுத்து திருக்கோயில்கள் மற்றும் அறநிறுவனங்களை கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டது. இச்செயல்பாடு தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது.

தற்சமய காலகட்டத்தில் இந்து அறநிலையத்துறை தேவையில்லை என்று ஒரு சாரார் தொடர்ந்து தங்களின் கருத்தினை தெரிவித்த வண்ணம் உள்ளார்கள். நாளுக்கு நாள் இக்கருத்தானது அதிகமாக கூறப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை ஏன் தேவையில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள் என்பதைப் பற்றி பின்வரும் கருத்துக்களின் வாயிலாக காண்போம்.

இந்து அறநிலையத்துறையானது பணம் காய்க்கும் மரமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்தத் துறையில் கிடைக்கும் வருமானத்தினைப் பிற துறைகளுக்கு செலவழிப்பது ஏற்புடையதல்ல. முக்கியமாக இந்து மதத்தினை தவிர்த்த ஏனைய பிற மதங்களுக்கு எந்தவித அறநிலையத்துறையும் இல்லை. பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் அறநிலையத் துறைக்கு கீழ் இயங்காமல் சுதந்திர அமைப்பாக இருப்பதால் அதன் வருமானம் நேரடியாக அரசுக்கு வருவதில்லை. மேலும் கோவில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் அதனை தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்து வருகின்றனர். மேலும் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதோடு மட்டுமல்லாமல் அதனை தங்களின் சொந்த இடமாக மாற்றி கொள்ளையடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் அவர்களும், இந்து சமய அறநிலையத்துறை தேவையற்றது என்கிற கருத்தினைத் தொடர்ந்து முன்மொழிந்தவாறே உள்ளார். அவரின் கூற்றுப்படி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் தான் தெய்வச்சிலைகள் மாயமாக்கப்படுகிறது, மேலும் அதிகாரிகளின் பெயர்கள் கல்வெட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், வீடுகள் போன்றவை தெரிந்தவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் குறைந்த செலவில் குத்தகை விடப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் இவற்றால் கிடைக்கும் வருமானம் தனிநபர்களின் பாக்கெட்டிற்கே செல்கிறது. இச்செயல் முறையற்றது. மேலும் கோவிலுக்காக தங்களின் நிலங்களை தானமாக வழங்கியவர்களின் நல்மதிப்பை இத்தகைய குற்றங்கள் கெடுக்குமாறு உள்ளது. பக்தர்கள் மூலம் கிடைக்கும் வருவாயினை கோவில் பராமரிப்பு செலவுக்கு செலவிடாமல் இருப்பதால் கோவில்களின் மீது அரசு தலையிடாமல் விலகியிருப்பதே நல்லது என்று இந்து அறநிலையத்துறை தேவையில்லை என்று கூறுபவர்களின் கூற்றானது அமைந்திருக்கிறது.

இந்துசமய அறநிலையத்துறை தேவையான அமைப்புதான் என்றும் அதனால்தான் இந்துக்கோவில்கள் முறையாக கண்காணிக்கப்பட்டு, பரமாரிக்கப்பட்டு வருகிறது என்றும் இன்னொரு சாரார் கூறி வருகிறார்கள். அவர்கள் பக்க நியாயங்களை பின்வரும் செய்திகளிம் மூலம் காண்போம்.

இந்து சமய அறநிலையத்துறை இருப்பதால் தான் கோவில் விழாக்கள் முறையாக நடைபெறுகிறது. மேலும் கோவில்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சிலரது கூற்றாக உள்ளது. இந்து அறநிலையத்துறை 40,000 மேற்பட்ட கோவில்களை பராமரித்து வருகிறது. பழுதுபட்ட ஆலயங்கள் பழுதுபார்த்து சரியாக்கப்படுகிறது. மேலும் பக்தர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை இத்துறை மேற்கொள்கிறது. மேலும் கோவில்களின் நிர்வாகத்தை சரியாக நிர்வகிக்கவும், பணம் நகைகளை சரிவர கணக்கில் கொள்வதற்கும் இந்தத் துறையானது கட்டாயம் தேவைப்படுகிறது. கோயில்களின் சிலைகளை பராமரித்து மேற்கொண்டு அவைகள் திருடப்படுவதிலிருந்து தடுக்கவும், சிலைகள் மீட்கப்படுவதற்கும் அறநிலையத்துறை தேவைப்படுகிறது என்று அதன் தேவையை உணர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இந்த அறநிலையத்துறையானது அரசியல் சார்பற்றவர்களின் கைககளிலும், நேர்மையானவர்களின் கைகளிலும் இருக்கவேண்டும் என்பது சிலரின் கூற்று ஆகும். அப்படி இருந்தால் தான் கோவில் நிர்வாகப் பணிகளும், பராமரிப்பு பணிகளும் சரியாக மேற்கொள்ளப்படும் என்று அறநிலையத்துறை தேவை என்ற கூற்றினை ஆதரிப்பவர்களின் கருத்தாக உள்ளது. சில கோவில்கள் ஆதினங்கள் பராமரிப்பில் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான கோவில்களை யார் பராமரிப்பது என்ற கேள்வி எழுகிறது.

மேலும் அறங்காவலர்களை நியமித்து அவர்கள் தான் நிர்வாகம் செய்ய வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் பெரும்பாலும் அரசியல் சார்ந்த நபர்களே அறங்காவலர்களாக நியமிக்கப்படுகின்றனர். இது குறித்து சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கூட கருத்து தெரிவித்துள்ளது. சமீபத்தில் சென்னை மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவராக திமுகவை சார்ந்த முன்னாள் எம் எல் ஏ கே.எஸ்.இரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல, அறநிலையத்துறை தேவை மற்று தேவையில்லை என்று இரு சாரார்களும் தங்களின் கருத்தினை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.

Exit mobile version