அசாம் மாநில முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வ சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அசாம் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், யார் முதலமைச்சராவது என்பதில் சர்பானந்த சோனோவலுக்கும், ஹிமந்த் பிஸ்வ சர்மாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இதையடுத்து, பாஜக தேசியத் தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இருவரையும் டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தினர்.
நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஹிமந்த் பிஸ்வ சர்மாவை முதலமைச்சராக்குவது என கட்சி தலைமை முடிவு செய்தது. இதனால், முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய சர்பானந்த சோனோவல், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஜக்தீஷ் முகியிடம் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து, கவுகாத்தியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், புதிய முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வ சர்மா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர், ஹிமந்த் பிஸ்வ சர்மாவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.