அசாம் மாநிலத்தின் காவல்துறை துணை கண்காணிப்பாளராக தடகள வீராங்கனை ஹிமா தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இளம் வயதிலேயே காவல்துறை அதிகாரியான ஹிமா தாஸ் கடந்து வந்த பாதையை விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு…
அசாம் மாநிலம் நாகான் நகரில் பிறந்த ஹிமா தாஸ், சிறுவயதில் மண் தரையில் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடி வந்தார். அவரது கனவு இந்திய கால்பந்து அணியில் இடம் பெற வேண்டும் என்றே இருந்தது.
ஆனால், அவரது பாதை கால்பந்து மைதானத்தில் இருந்து, தடகள ஓடுபாதைக்கு தடம் மாறியது.
2018ஆம் ஆண்டு, பின்லாந்தில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான 400 மீட்டர் மகளிர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 51 புள்ளி 46 வினாடிகளில் இலக்கை கடந்து, தங்கத்தை வென்றார். கடைசி 80 மீட்டர் தொலைவில் முன்னணியிலிருந்த 3 வீராங்கனைகளை முந்திச் சென்று, முதலிடத்தைப் பிடித்து வரலாறு படைத்தார், ஹிமா தாஸ்.
உலக அளவிலான போட்டியில், 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே.
2019ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் மட்டும், சர்வதேச தடகளப் போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்களை வென்றார் ஹிமா தாஸ்.
இந்நிலையில், ஹிமா தாஸை, டிஎஸ்பியாக நியமனம் செய்து அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் உத்தரவிட்டுள்ளார். பணி நியமனம் பெற்ற மேடையில் பேசிய ஹிமா தாஸ், காவல்துறை அதிகாரியாக வர வேண்டும் என்ற தனது சிறு வயது கனவும், தனது அம்மாவின் ஆசையும் நிறைவேறிவிட்டதாக மகிழ்ச்சி ததும்ப தெரிவித்தார்.
21 வயதாகும் ஹிமா தாஸ், தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்காக, தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
முயற்சி திருவினையாக்கும், பயிற்சி சாதனையாளராக்கும் என்பதற்கு, ஹிமா தாஸே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பதில் ஐயமில்லை.