புதிதாக தொடங்கப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தின் சிறப்புகள்

காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு, அம்மாவட்டத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் இன்று துவக்கி வைக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்படும் என்ற அறிவிப்பு ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்டது. அதற்கான அரசாணை கடந்த 12ஆம் தேதி வெளியானது. செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகரம் செங்கல்பட்டு நகரம் ஆகும்.

மாவட்டத்தில் செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய 3 வருவாய் கோட்டங்கள் உள்ளன.

செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், திருக்கழுக்குன்றம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய 8 வருவாய் வட்டங்கள் உள்ளன.செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 பேரூராட்சிகள், 8 நகராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்கள் இடம்பெற்று உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தின் பரப்பளவு 2 ஆயிரத்து 944 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 28 லட்சத்து 41 ஆயிரத்து 572 வாக்காளர்கள் உள்ளனர்.

செங்கல்பட்டு, பல்லவர் காலத்தில் உருவான பழமையான நகரம் ஆகும். இது மூன்று பக்கமும் மலையாலும், ஒரு பக்கம் கொளவாய் ஏரியாலும் சூழப்பட்டு உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே செங்கல்பட்டு தனி மாவட்டமாக இருந்துள்ளது.

கொளவாய் ஏரியில் உள்ள ஓடைகளில் செங்கழுநீர் மலர் பூத்து குலுங்கியதால் இந்த ஊர் முதலில் செங்கழுநீர்பட்டு என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் செங்கழுநீர்பட்டு என்ற பெயர் மருவி செங்கல்பட்டு என மாற்றமடைந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் புராதன சின்னங்கள், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போன்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன

திருப்போரூர் கந்தசாமி கோவில், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் போன்ற பிரசித்தி பெற்ற ஆலயங்களும் இங்கு உள்ளன.

Exit mobile version